இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துமாறு பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் கூறியதற்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு , மேற்கத்திய நாடுகளின் ஆதரவின்றி போரில் இஸ்ரேல் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.
இன்று காணொளி வாயிலாக பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு..
“ஈரானின் காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக இஸ்ரேல் போராடிக் கொண்டிருக்கிறது. இந்த வேளையில், நாகரிகமடைந்த நாடுகள் இஸ்ரேலின் பக்கம் நிற்கவேண்டும். தற்போது பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன் மற்றும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேல் மீது ஆயுதத் தடை விதிக்குமாறு கூறுகின்றனர். இது அவர்களுக்கு அவமானம்” என்று கூறினார்.
காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹவுதிக்கள், ஈராக் மற்றும் சிரியாவில் ஷியாக்கள், போன்ற பலமுனைத் தாக்குதல்களால் இஸ்ரேல் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், இந்த நேரத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவது பெரிய பாசங்குத்தனம் என்றார்.
இஸ்ரேல் இந்த போரில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவிலோ அல்லது ஆதரவில்லாமலோ ஜெயிக்கலாம். ஆனால், அவர்களின் அவமானம் இந்தப் போரின் வெற்றிக்குப் பின்னரும் தொடரும்” பிரதமர் நெதன்யாஹு கடுமையாக விமர்சித்துள்ளார்.
தன்னுடைய பேச்சுக்கு எதிராக இஸ்ரேல் பிரதமர் இவ்வாறு பேசியது குறித்து கருத்து தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன், “நாங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளோம். இது இஸ்ரேலின் பாதுகாப்பு உட்பட இது ஒரு தவறான புரிதலாகும். போர் எப்போதும் வெறுப்பையே வளர்க்கும். லெபனான் மற்றொரு காஸாவாக மாறக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.