மத்திய வங்கி ஆளுனர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் எந்தவொரு மத்திய வங்கி ஆளுனர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவு கிடைக்கப்பெறாதென குறித்த வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நிர்வாக சபை தலைவர் மற்றும் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அரச அதிகாரத்துடன் இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். இதற்கமைய கடந்த செப்டம்பர் 11ம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கி ஆளுனர்களின் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஓய்வூதிய கொடுப்பனவு திட்டம் கடந்த 1998ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி ரத்து செய்யப்பட்டிருந்தது. எனினும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிந்து அதனை நடைமுறைப்படுத்த அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
இதனூடாக மத்திய வங்கி ஆளுனர்களுக்கு இறுதியாக வழங்கப்பட்ட அடிப்படை சம்பளத்தின் நூற்றுக்கு 74 வீதத்த்தை ஒத்த மாதாந்த ஓய்வூதிய கொடுப்பனவு அவர்களின் சேவைக் காலத்தை கவனத்திற் கொள்ளாது வழங்கப்பட்டது.
புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கமைய முன்னர் இருந்த, தற்போது இருக்கும் அல்லது எதிர்காலத்தில் நியமிக்கப்படும் எந்தவொரு மத்திய வங்கி ஆளுனர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவு கிடைக்கப்பெறமாட்டாது.