அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ம் திகதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
கடந்த 10-ம் திகதி இரு வேட்பாளர்களும் தொலைக்காட்சி நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர்.
இருவரும் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி வரும் நிலையில், மக்கள் மத்தியில் யாருக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது என்பதை முடிவு செய்ய அவ்வப்போது கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது.
ஏற்கனவே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றிருந்தார்.
இந்நிலையில், சிகாகோ பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி கமலா ஹாரிஸ் டிரம்பைவிட 38 புள்ளிகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார்.
ஆசிய அமெரிக்க வாக்காளர்களிடையே டிரம்பை விட கமலா ஹாரிஸ் 38 சதவீத புள்ளிகளால் முன்னிலை வகிக்கிறார்.
ஆசிய அமெரிக்க வாக்காளர்களில் 66 சதவீதம் பேர் ஹாரிசுக்கு வாக்களிக்க திட்டமிட்டுள்ளனர். 28 சதவீதம் பேர் முன்னாள் அதிபர் டிரம்ப்பை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். வேறொரு வேட்பாளரை ஆதரிப்பதாகக் கூறுபவர்கள் அல்லது முடிவு செய்யப்படாதவர்கள் 6 சதவீதம்.
ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்பட்ட 2024 ஆசிய அமெரிக்க வாக்காளர் கணக்கெடுப்பில், ஆசிய அமெரிக்க வாக்காளர்களில் 46 சதவீதம் பேர் ஜோ பைடனை ஆதரித்தனர். 31 சதவீதம் பேர் டிரம்பை ஆதரித்தனர். அதே நேரத்தில் 23 சதவீதம் பேர் வேறு ஒருவருக்கு வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளோம் அல்லது முடிவு செய்யவில்லை என கூறினர்.
அதிபர் ஜோ பைடன் போட்டியிலிருந்து வெளியேறி, துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஆன பிறகு நடத்தப்பட்ட முதல் கருத்துக்கணிப்பு இதுவாகும்.