வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து தனது மனைவிக்கு தினமும் சுமார் 100 முறை போன் செய்து தொந்தரவு செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜப்பானில் உள்ள ஹியோகோ மாகாணத்தைச் சேர்ந்த 31 வயதான பெண் ஒருவருக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து அழைப்புகள் வந்துள்ளது. அந்த அழைப்புகளுக்கு பதிலளித்தும் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு கட் செய்துள்ளனர். இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்தும் அவர் அலட்சியம் காட்டியதால் அப்பெண் விரக்தி அடைந்துள்ளார்.
என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பெண்ணுக்கு, ஒரு நாள் கணவன் தூங்கிக்கொண்டிருக்கும்போது, போனில் விளையாடும்போது அல்லது அவளுடன் நேரத்தை செலவிடும்போது அழைப்புகள் வராததை உணர்ந்தார். கணவர் மீது சந்தேகம் வந்ததை அடுத்து ஒருநாள் இருவரும் ஒன்றாக ஷாப்பிங் செய்யும் போது, அப்பெண் கணவரின் செயல்களை உன்னிப்பாகக் கண்காணித்தாள். அவன் தொலைபேசியைத் தொடாததைக் கவனித்தாள். அச்சமயத்தில் தொலைபேசி அழைப்புகள் வராததை உணர்ந்த பெண் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் தம்பதியரின் தொலைபேசி பதிவுகளை ஆய்வு செய்தபோது, கணவரே வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து அழைத்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில், தம்பதியர்களுக்குள் பிரச்சனை எதுவும் இல்லை என்றும் இணக்கமாக வாழ்வதையும் தெரிந்து கொண்டனர்.
இதையடுத்து கணவரை போலீசார் கைது செய்து விசாரித்த போது மனைவியை மிகவும் நேசிப்பதாக கூறினார்.
ஜப்பானில், தொல்லை தரும் தொலைபேசி அழைப்புகள் மூலம் குறிப்பிடத்தக்க மன உளைச்சலை ஏற்படுத்துவது கிரிமினல் குற்றமாகக் கருதப்படுகிறது. மீறுபவர்களுக்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது 1 மில்லியன் யென் (US$7,000) வரை அபராதம் விதிக்கப்படலாம்.