காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் புதன்கிழமையுடன் (11) நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் வியாழக்கிழமை (12) பொறுப்பேற்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
எல்பிட்டிய பிரதேச சபையின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் உள்ளுர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயத்தின் ) 26 ஆம் பிரிவின் கீழ் எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளர், உப தலைவர், மற்றும் உறுப்பினர்கள் தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பொறுப்பேற்றல், கட்டுப்பணம் செலுத்தல் விபரங்களை எல்பிட்டிய பிரதேச சபை தெரிவத்தாட்சி அலுவலகம் கடந்த மாதம் 26 ஆம் திகதி வெளியிட்டது.
கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட காலவகாசம் இன்றுடன் (11) முடிவடைகிறது. கட்டுப்பணம் செலுத்தியவர்கள் காலி மாவட்ட செயலகம், அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நாளை (12) வியாழக்கிழமை நண்பகல் வரை வேட்புமனுக்களை கையளிக்க முடியும்.
தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்ட காலவகாசம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையும்.
எக்காரணிகளுக்காவும் வழங்கப்பட்டுள்ள காலவகாசம் நீடிக்கப்பட மாட்டாது. குறித்த திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டமையால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது.ஆகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உயர்நீதிமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியது.