ஆந்திர மாநிலம் குண்டூரில் பல்வேறு சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான மதுபோத்தல்களை பொலிஸார் அழிக்கும் நடவடிக்கையில் இறங்கினர். இதற்காக கைப்பற்றப்பட்ட மதுபோத்தல்களை எட்டுகுரு சாலையில் உள்ள ஒரு பகுதிக்கு கொண்டு சென்றனர்.
கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் அதிகமான ரூ.50 இலட்சம் மதிப்புள்ள மதுபானங்களை பல்வேறு ரகங்களில் அவற்றை தரையில் வரிசையாக அடுக்கி வைத்திருந்தனர்.
அதன் மீது புல்டோசரை ஏற்றி அழிப்பது என்பது அவர்களின் நடவடிக்கையாக இருந்தது. எல்லாவற்றையும் தயார் செய்து வைத்துக்கொண்டு, ஆதாரத்திற்கு போத்தல்கள் அடுக்கி வைத்திருப்பதை புகைப்படம், காணொளி எடுத்துக் கொண்டிருந்தனர்.
இந் நேரத்தில் கூட்டமாக வந்த நபர்கள் போலீசாரை மீறி அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுப்போத்தல்களை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.
இந்த செயலால் திகைத்துபோன பொலிஸார், வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
ஒரே நேரத்தில் இத்தனை பேர் எங்கிருந்து வந்தனர், அவர்களுக்கு மதுபோத்தல்களை அழிப்பது எப்படி தெரியும் என்ற ரீதியிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.