வியட்நாமில் புயலை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை காரணமாக இன்று ஒரு பாலம் இடிந்து விழுந்தது. ஒரு பஸ்சும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. வியட்நாமை சனிக்கிழமை தாக்கிய யாகி என்ற சூறாவளி புயல் பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவின்போது 50 பேர் இறந்தனர்.
இந்தநிலையில் காவ் பாங் மாகாணத்தில் 20 பேருடன் சென்ற பயணிகள் பஸ் ஓடையில் அடித்துச் செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து மீட்புப் படையினர் குவிக்கப்பட்டனர், ஆனால் நிலச்சரிவுகள் காரணமாக மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
அதுபோல புதோ மாகாணத்தில் ஆற்றின் மீது இரும்புப் பாலம் இடிந்து விழுந்தது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. 2 மோட்டார் சைக்கிள்கள், 10 கார்கள் மற்றும் டிரக்குகள் ஆற்றில் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று பேர் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் 13 பேர் காணவில்லை. வியட்நாமைத் தாக்கும்முன், யாகி புயல் கடந்த வாரம் பிலிப்பைன்சில் 20 உயிர் இழப்புகளையும், தெற்கு சீனாவில் நான்கு பேரையும் பலிவாங்கியது குறிப்பிடத்தக்கது.