அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சமீபத்திய கருத்துக்கணிப்பில் இருவரும் இடையே சிறிய அளவில்தான் வித்தியாசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசியல் நிபுணர்கள் கூறும்போது, கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ் சில விகிதங்களில் முன்னேறி வந்தாலும் தொடக்கம் முதலே டிரம்ப் சராசரியாக 47 சதவீத ஆதரவுடன் உறுதியான இடத்தில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
விலடிவோஸ்டாக்கில் உள்ள கிழக்கு பொருளாதார மன்றத்தில் பேசிய புடின், “அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தான் எங்களது விருப்பமான வேட்பாளராக இருந்தார். ஆனால் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகி கமலா ஹாரிஸை ஆதரித்தார். ஆகவே நாங்களும் கமலா ஹாரிஸை ஆதரிக்கிறோம்.
கமலா ஹாரிஸின் சிரிப்பு தனித்துவமாக உள்ளது. அந்த சிரிப்பே அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற உணர்வைத் தருகிறது.
முன்பு அதிபராக இருந்த ட்ரம்ப், ரஷ்யாவிற்கு எதிராக பல கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்தார். கமலா ஹாரிஸ் அத்தகைய செயல்களை செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன்.
ஆனால் இறுதியில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை அமெரிக்க மக்கள் தான் முடிவு செய்வார்கள்” என்று தெரிவித்தார்.