கொங்கோ இராச்சியத்திலுள்ள சிறைச்சாலையில் கைதிகள் தப்பிச் செல்ல முயற்சித்ததால் ஏற்ப்பட்ட சனநெரிசலில் சிக்குண்டு 129 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் கின்ஸ்ஹாசாவிலுள்ள மகாலா சிறைச்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் 14000 கைதிகள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் உயர் பாதுகாப்பு நிறைந்த சிறைச்சாலையில் காவலரண்களை உடைத்துக்கொண்டு கைதிகள் தப்பிக்க முயற்சித்த போது பாரிய சனநெரிசல் ஏற்ப்பட்டுள்ளது.
அத்துடன் கைதிகளை தடுப்பதற்கு பொலிசார் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன் இதில் 24 கைதிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உட்துறை அமைச்சர் ஷாபானி லூகோ தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை கதவுகளை உடைக்க முயற்சித்த போது ஒரே நேரத்தில் கைதிகள் வெளியேறிய போது ஏற்ப்பட்ட சனநெரிசலில் முச்சுத்திணறலுக்கு உள்ளாகியே பல கைதிகள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
1500 கைதிகளை மாத்திரமே தடுத்து வைக்கக்கூடிய வசதிகளைக் கொண்ட குறித்த சிறைச்சாலையில் 14000 கைதிகள் உள்ளனர். இதனால் அங்கு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.