ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய தொகையை விட அதிகமாக செலவு செய்துள்ளதாக நீதிமன்றில் கண்டறியப்பட்டால் அவர் பதவியை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த வேட்பாளரின் சிவில் உரிமைகள் மூன்று வருடங்கள் பறிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பில் கண்டியில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வின் போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு வர்த்தமானி இலக்கம் 03 ஊடாக இது தொடர்பான விவரம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், 1947 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலின் போதும், 31 நாட்களுக்குள் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான அறிக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அதனை வழங்காமை மற்றும் தவறான தகவல்களை வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் அவ்வாறானவர்களின் பதவி மற்றும் குடியுரிமை பறிக்கப்பட்ட சம்பவங்கள் வரலாற்றில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டு புதிய சட்டத்தின் மூலம் இது சட்டமாகிவிட்டதால், தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்களது வருமானம் மற்றும் செலவு விவரங்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் அளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், இது தொடர்பான விவரங்கள் பத்திரிகை விளம்பரங்கள் மற்றும் இணையதளங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி, செலவின விவரங்கள் முரண்பாடாகவோ அல்லது தவறான தகவல்களாகவோ இருந்தால், எந்நேரத்திலும் அதற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்து நீதிமன்றில் நடவடிக்கை எடுக்க சட்டத்தின் மூலம் மக்களுக்கு அனுமதியுள்ளதாக ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.