பங்களாதேஷ் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஓவர்களை வீசுவதற்கு தாமதித்த காரணத்திற்காக இரண்டு அணிகளினதும் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் அபாரதாமாக விதிக்கப்பட்டுள்ளன.
ராவல்பிண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானுடன் வரலாற்று சரித்திர வெற்றிபெற்றது.
குறித்த இந்தப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 6 ஓவர்களை வீச தவறிய பாகிஸ்தான் அணிக்கு 6 ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளும், வீரர்களுக்கு போட்டிக்கட்டணத்தில் 30 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டது.
அதேநேரம் பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 3 ஓவர்களை வீச தவறியதன் காரணமாக அந்த அணிக்கு 3 டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் மற்றும் 15 சதவீதம் போட்டிக்கட்டணத்தில் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு மாத்திரமின்றி அந்த அணியின் சகலதுறை வீரர் சகீப் அல் ஹஸனுக்கு தனிப்பட்ட ரீதியில் ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
குறித்த இந்தப் போட்டியில் மொஹமட் ரிஸ்வான் துடுப்பெடுத்தாடும் போது, அவரை அச்சுறுத்தும் வகையில் பந்தை வீசியெறிந்த குற்றச்சாட்டுக்காக சகீப் அல் ஹஷனுக்கு போட்டிக்கட்டணத்தில் 10 சதவீதமும், ஒரு தரமிறக்கல் புள்ளியும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.