கன்னட திரையுலகில் பிரபல நடிகர் தர்ஷன், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியை கொலை செய்ததாக பெங்களூரு காமாட்சிபாளையா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2 மாதமாக சிறைவாசம் அனுபவிக்கும் அவர், இதுவரை ஜாமீன் கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவில்லை. அடுத்த மாதம்(செப்டம்பர்) முதல் வாரத்தில் ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் உள்பட 17 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள தர்ஷன் வீட்டு உணவு, படுக்கை விரிப்பு கேட்டு கர்நாடக ஐகோர்ட்டு, சிறைத்துறை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நடிகர் தர்ஷனுக்கு மற்ற கைதிகள் போல சிறை உணவு வழங்கப்படுவதாகவும், எந்த சொகுசு வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் நடிகர் தர்ஷன் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தபடி ரவுடியுடன் சேர்ந்து சிகரெட் புகைக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
அதாவது ஒரு கையில் டீ கப்பும், மற்றொரு கையில் சிகரெட் வைத்திருப்பது போல் நாற்காலியில் நடிகர் தர்ஷன் அமர்ந்துள்ளார். அவருடன் பிளாஸ்டிக் நாற்காலியில் தர்ஷனின் மேலாளர் நாகராஜ், பிரபல ரவுடி வில்சன் கார்டன் நாகா, மற்றொரு கைதி அமர்ந்துள்ளனர். அவர்கள் 3 பேருடன் நடிகர் தர்ஷன் சிரித்து பேசியபடி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
சிறையில் கைதிகள் பீடி, சிகரெட் உள்ளிட்டவை புகைக்க அனுமதி கிடையாது. அப்படி இருந்தும் கொலை வழக்கில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள தர்ஷன், நாற்காலியில் அமர்ந்தபடி டீ குடித்து கொண்டே சிகரெட் புகைப்பதுடன், ரவுடியுடன் பேசிக் கொண்டு இருக்கும் புகைப்படம் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், நடிகர் தர்ஷனுக்கு சலுகை வழங்கியதில் தொடர்புடைய 7 அதிகாரிகளை கண்டறிந்து அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு கடுமையான பாதுகாப்பு குறைபாடு என்று அமைச்சர் பரமேஸ்வர் கூறினார்.