2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை கண்காணிக்க 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் பிரதிநிதிகளும் தேர்தலை அவதானிப்பதற்காக வருகை தரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே இலங்கை வந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
வாக்களிப்பு நடவடிக்கைகள் உட்பட அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் பொறுப்பு சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் விரிவான அறிக்கையை அவர்கள் வழங்குவார்கள் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.