கெரவலப்பிட்டிய ‘சொபாதனவி’ ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையத்திற்கு திரவ இயற்கை எரிவாயு சேமிப்பிற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், எல்என்ஜி எரிவாயுபரிமாற்றம் மற்றும் விநியோகம் தொடர்பில் இலங்கை எல்.டி.எல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மற்றும் பெட்ரோநெட் எல்.என்.ஜி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (20) பிற்பகல் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.
இலங்கை எல்ரீஎல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நுஹுமான் மரிக்கார் மற்றும் இந்தியாவின் பெட்ரோநெட் எல்என்ஐி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அக்ஷய் குமார் சிங் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கையின் நுகர்வோர்களுக்கு தொடர்ச்சியான மற்றும் தரமான மின்சார விநியோகத்தை உறுதிசெய்து குறைந்த செலவில் மின்சாரத்தை வழங்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கத்திற்கமையவே இத்திட்டம் செயற்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.
கடந்த இரண்டு வருடங்களில் மின்சாரக் கட்டணம் தொடர்பில் அரசாங்கம் கடினமான கொள்கைத் தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்த போதிலும், இன்று மின்சார சபையானது கடனற்ற பலமான நிறுவனமாக மாறியுள்ளதாகவும் அதனால்தான் உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதன் ஊடாக புதிய உடன்படிக்கைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எல்ரீஎல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மற்றும் பெட்ரோநெட் எல்என்ஐி நிறுவனத்திற்கு இடையிலான கூட்டுமுயற்சியின் ஊடாக சொபாதனவி மின் உற்பத்தி நிலையத்திற்கு எல்என்ஐி வழங்குவதற்கான இடைக்கால தீர்வாக, இந்தியாவின் கொச்சியில் அமைந்துள்ள பெட்ரோநெட் நிறுவனத்தின் முனையத்தின் அதி குளிரூட்டல் வசதியுடன் கூடிய கொள்கலன்கள் ஊடாக கொழும்பு துறைமுகத்திற்கு எல்என்ஐி இறக்குமதி செய்வதற்கான தொழில்நுட்ப ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பின்னர், சொபாதனவி நிலையத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்படும் கெரவலப்பிட்டி சேமிப்பு மற்றும் எரிவாயுபரிமாற்ற முனையத்திற்கு ISO கொள்கலன்களில் எல்என்ஐி எடுத்துச் செல்லப்படும்.
சொபாதனவி ஆலையின் முதல் கட்டம் ஆகஸ்ட் 2024 லும், இரண்டாம் கட்டம் 2025 முதல் காலாண்டிலும் ஆரம்பிக்கப்படுவதோடு இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அத்தோடு எல்ரீஎல் ஹோல்டிங்ஸ் நிறுவன மின் அபிவிருத்திப் பிரிவான லக்தனவி நிறுவனத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்டு இயக்கப்படும் இந்த ஆலை அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப நாட்டின் எரிசக்தி ஆற்றல் உற்பத்தி திறனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூய எரிசக்தி ஆதாரமான எல்என்ஜியின் பயன்பாட்டின் ஊடாக பசுமை இல்ல வாயு உமிழ்வை குறிப்பிடத்தக்க அளவினால் குறைத்து இலங்கை தனது சுற்றுச்சூழல் இலக்குகளை அடைய உதவும்.மேலும், எல்என்ஜி மின்சார உற்பத்திச் செலவைக் குறைக்கும் என்பதோடு நுகர்வோருக்கு பொருளாதார நிவாரணம் மற்றும் பரந்த பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கருத்துத் தெரிவித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர,
கடந்த எரிசக்தி நெருக்கடியின் போது, இந்த நாட்டில் மின்சாரத்தின் தேவையை கருத்தில் கொண்டு, பல்வேறு முன்மொழிவுகள் குறித்து ஆராயப்பட்டது. எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வு வழங்குவது மற்றும் இயற்கை திரவ எரிவாயு மூலம் செலவைக் குறைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இதன் விளைவாக கடந்த வருடம் மார்ச் மாதம் இந்திய அரசாங்கத்தின் இயற்கை எரிவாயு மற்றும் பெற்றோலிய அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்த போது இத்திட்டத்திற்கான முதற்கட்ட முன்மொழிவு கையளிக்கப்பட்டது.
அந்த முன்மொழிவைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற கலந்துரையாடலின் பலனாக இன்று இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகிறது. இன்றிலிருந்து 18 மாதங்களுக்குள், ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள எல்ரீஎல் குழுமத்தின் தற்போதைய மின் நிலைய கட்டமைப்புக்கு தேவையான உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தேவையான திரவ இயற்கை எரிவாயு விநியோகம் ஆகியவற்றுடன் இந்த நாட்டு மக்களுக்கு தேவையான நன்மைகளை வழங்க எதிர்பார்க்கிறோம்.
திரவ இயற்கை எரிவாயு மூலம் மின்சார உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இந்த நாட்டில் மின்சாரச் செலவைக் குறைக்க முடியும்.மின் உற்பத்தி நிலையங்கள் எல்என்ஜியில் இயங்கும் போது, குறைந்தபட்சம் 40% முதல் 50% வரை செலவைக் குறைக்க முடியும். அந்த அனுகூலத்தை நுகர்வோருக்கு வழங்குவதற்கும் இலங்கையில் எரிசக்தி செலவைக் குறைப்பதற்கும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது எளிதான பணி அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், குறிப்பாக யுகதனவி மற்றும் சொபாதனவி மின் உற்பத்தி நிலையங்களில் இந்த மின் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம். ஆனால் சொபாதனவி மின்உற்பத்தி நிலையம் ஆகஸ்ட் 28ஆம் திகதி திறக்க எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உடன்படிக்கை கைச்சாத்திடுவதன் மூலம் இந்நாட்டு மின்சார பாவனையாளர்கள் எதிர்காலத்தில் பாரிய அனுகூலத்தைப் பெறப் போகிறார்கள். இது நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
நாட்டின் மின்சாரத் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்தும், மீதமுள்ள 30% இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டில் மின்சார சபை 300 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளது. அவற்றில் நாட்டின் இரண்டு அரச வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கடன்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய பணமும் அடங்கும். வங்கிக் கடன்களில் பெரும் பகுதியைச் செலுத்திவிட்டோம். மேலும், மின் உற்பத்தி நிலையங்களை இயக்கும் விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களும் தற்போது செலுத்தப்பட்டுள்ளன. மேலும், கடினமான மற்றும் சரியான முடிவுகளை எடுத்ததன் காரணமாக பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் அனைத்து கடன்களையும் செலுத்த முடிந்துள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே:
அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நம்பகமான, சுத்தமான மற்றும் நிலையான எரிசக்தி வழங்கல் மிகவும் முக்கியமானது. எமது கூட்டு முயற்சிகள் இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதிலும் பொருளாதார அபிவிருத்தியின் முக்கிய அங்கமாக செயற்படும். ஆற்றல் செலவினங்களைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய எரிசக்தி வலையமைப்பில் இலங்கையை இணைப்பதன் ஊடாக பிரதான எரிசக்தி பரிமாற்ற மத்திய நிலையமாக இலங்கையின் மிகப்பெரிய பசுமை மூலங்களை பயன்படுத்தவும் முதலீட்டை ஈர்க்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எங்கள் தற்போதைய திட்டங்களில் எரிசக்தி வலையமைப்பு இணைப்பு, உட்கட்டமைப்பு இணைப்பு மற்றும் பல்உற்பத்திக் குழாய்களை நிறுவுதல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. சம்பூரில் சூரிய சக்தி மின் திட்டம் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களிலும் முதலீடு செய்து வருகிறோம்” என்றார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன,எல்ரீஎல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் யு.டி.ஜயவர்தன, இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இளங்ககோன், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சாலிய விக்கிரமசூரிய மற்றும் ஏனைய அமைச்சின் அதிகாரிகள், அரச அதிகாரிகள், முதலீட்டாளர்கள். , இரு நிறுவனங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.