சிறையிலிருக்கும் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவிக்கு விண்ணப்பம் செய்துள்ளார்.
“இம்ரான் கான் தனது குழுவிற்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவு அளித்துள்ளார். விண்ணப்பத்தின் பரிசீலனை தற்போது நடைபெறுகிறது.
“இது ஒரு மரியாதைக்குரிய பதவியாகும். இம்ரான் கான் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் அது சிறந்தது. அப்படி நடந்தால் முதல் ஆசிய நபர் ஆவார். இது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல. ஆசியா மற்றும் உலகத்திற்கும் சிறந்த சாதனையாக கருதப்படும்” என தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கான லண்டன் செய்தி தொடர்பாளர் சயீத் ஜுல்ஃபிகர் புகாரி தெரிவித்துள்ளார்.
ஹாங்காங்கின் கடைசி பிரட்டிஷ் கவர்னரான கிறிஸ் பாட்டன் கடந்த பிப்ரவரி மாதம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தலைவர் பதவியில் இருந்த விலகினார். இதனால் தலைவர் பதவி வெற்றிடமாக உள்ளது.
10 வருட வேந்தர் பதவிக்கு போட்டியிடுபவர்களின் விவரங்கள் அக்டோபர் மாதம் வரை வெளியிடப்படாது. அக்டோபர் மாதம் கடைசியில் வாக்கெடுப்பு நடைபெறும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தத்துவம், அரசியல், பொருளாதாரம் படிப்பு முடித்த இம்ரான் கான் 1975-ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.