பங்களாதேஷில் நடத்தவிருக்கும் டி20 மகளிர் உலக கிண்ண தொடரை அந்நாட்டில் நடத்தாத பட்சத்தில் தமது நாட்டில் அதனை நடத்துமாறு ஐ.சி.சி யிடம் சிம்பாம்பே கோரிக்கை விடுத்துள்ளது.
இம்முறை மகளிர் உலக கிண்ண டி20 கிரிக்கட் தொடர் பங்களாதேஷில் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ளது. பங்களாதேஷில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற சூழல் காரணமாக அந்நாட்டில் தொடரை நடத்துவதா அல்லது வேறு நாடொன்றில் தொடரை நடத்துவதா என்பது தொடர்பில் ஐ.சி.சி ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
2003ம் ஆண்டுக்கு பின்னர் சிம்பாம்பேயில் எந்தவொரு கிரிக்கட் தொடரும் இடம்பெறவில்லை. தேசிய கிரிக்கட்டை முன்னேற்றும் செயற்பாட்டில் சிம்பாம்பே அதிக ஆர்வம் செலுத்தி வருவதுடன் அங்குள்ள பிரதான கிரிக்கட் மைதானமான ஹராரே மைதானம் பகலிரவு போட்டிகளை நடத்தக்கூடிய மைதானமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பங்களாதேஷில் போட்டிகளை நடத்தாது இந்தியாவில் நடத்துவற்கு ஐ.சி.சி அதிக ஆர்வம் செலுத்தி வருவதாக கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பருவப்பெயர்ச்சி காலநிலை நிலவும் மாதமாக ஒக்டோபர் மாதம் இருப்பதால் போட்டிகளை நடத்தும் பொறுப்பை ஏற்காதிருக்க இந்தியா தீர்மானித்துள்ளது.
இலங்கையிலும் குறித்த காலப்பகுதியில் மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமிருப்பதால் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொடரை நடத்தவும் ஐ.சி.சி எதிர்பார்த்துள்ளது. எவ்வாறெனினும் இதுவரை ஐ.சி.சி இறுதி தீர்மானத்தை எடுக்கவில்லை.