அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகரும் ஜெனீவாவின் இலங்கைக்கான தூதுவர் – நிரந்தர பிரதிநிதி ஹிமாலி அருணதிலகவிற்கு அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தினால் 543,000 டொலர் தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளது.
அவரது வீட்டில் வேலைக்கென இருந்த யுவதிக்கு உரிய முறையில் ஊதியத்தை வழங்காததால் அவருக்கு குறித்த தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. 3 வருடகாலமாக தனது வீட்டில் வேலை செய்த பிரியங்கா தனரத்ன என்ற பெண்ணிற்கு அவர் குறித்த காலத்திற்கென மொத்தமாக 11,200 டொலர்களையே ஊதியமாக வழங்கியுள்ளதார்.
இதனை மணித்தியால அடிப்படையில் கணக்கிட்டால் ஒரு மணித்தியாலத்திற்கு 75 சத டொலரே வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 3 வருட காலத்தில் 2 இரண்டு நாட்கள் மாத்திரமே பிரியங்காவிற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதுவும் வேலை செய்யும் போது கைகளில் ஏற்ப்பட்ட தீக்காயம் காரணமாக குறித்த விடுமுறையை பிரியங்கா எடுத்துள்ளார்.
உரிய முறையில் சம்பளம் வழங்காது அவுஸ்திரேலிய சட்டத்தை மீறும் வகையில் வீட்டுப் பணிப்பெண்ணை நடத்திய குற்றச்சாட்டில் ஹிமாலி அருணதிலக குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்துடன் வீட்டுப் பணிப்பெண்ணின் கடவுச்சீட்டையும் ஹிமாலி தன்வசம் வைத்திருந்தததுடன் அவர் தனியே வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளார்.