நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான வானிலை இன்றும் நாளையும் தற்காலிகமாக அதிகரித்துக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென எதிர்;பார்க்கப்படுகிறது.
காலி தொடக்கம் மாத்தறை ஹம்பாந்தோட்டை, பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான அத்துடன் சிலாபம் தொடக்கம் புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 55 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.