பெரிஸ் ஒலிம்பிக்கில் பாலினம் தொடர்பிலான சர்ச்சைகளுக்கு உள்ளாகி பலராலும் பேசப்பட்ட அல்ஜீரியாவின் இமான் கலீப் தங்கப் பதக்கம் வென்று தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மகளிருக்கான 66 கிலோ எடைப் பிரிவு குத்துச் சண்டை போட்டியில் அவர் தங்கப்பதக்கம் வென்றார். சீனாவின் யெங் லியுவை எதிர்த்தாடிய இமான் 5 – 0 என அவரை தோற்கடித்தார். இதற்கமைய இம்முறை ஒலிம்பிக்கில் அல்ஜீரியா சார்பில் முதல் தங்கப்பதக்கத்தை இமான் கலிப் வென்றுகொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிறப்பிலேயே உடலில் டெஸ்டெஸ்டரோன் மட்டம் அதிகமாக இருப்பதால் உயிரியல் ரீதியாக ஆண் என அடையாளப்படுத்தப்பட்ட இமான் கலீப் பெண்கள் பிரிவில் போட்டியிட்டமை தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
எவ்வாறெனினும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவும் சிலர் முன்வந்தனர்.
பாலியல் ரீதியாக தன்னை ஒரு ஆண் என நிரூபிக்க முடியாத இமான் கலீப் பெண்களுக்கான போட்டிகளில் பங்கேற்றிருந்தார். 25 வயதான இமான் தங்கப்பதக்கத்தை வென்றதன் பின்னர் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த தங்கபதக்கம் தனது கனவு என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதக்கத்தை வெல்வதற்காக கடந்த 8 வருடங்களாக நித்திரையின்றி பயிற்சிகளில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய மகளிரைப் போன்று தானும் ஒரு பெண்ணாகவே இந்த பூமியில் பிறந்துள்ளதாகவும் இந்த பெண்களுக்கான போட்டியில் ஏனைய மகளிரைப் போன்று போட்டியிடுவதற்கு தனக்கு அனைத்து உரிமைகளும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.