நிர்ணயித்த அளவை விட உடல் எடை 100 கிராம் கூடியதன் காரணத்தால் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதினார் இந்தியாவின் வினேஷ் போகத். முதல் நிமிடத்திலேயே வினேஷின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் நிலை தடுமாறிய யூஸ்னிலிஸ் எந்த ஸ்கோரும் எடுக்கவில்லை. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத். இதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பிக்கில் மல்யுத்த மகளிர் பிரிவின் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.
தகுதி நீக்கம் ஏன்?
50 கிலோ எடை பிரிவில் போட்டியிடும் வினேஷ் போகத்துக்கு இந்திய நேரப்படி இன்று காலை 9 மணியளவில் எடை தகுதி சோதனை செய்தபோது 50 கிலோ மற்றும் 100 கிராம் எடை இருந்தது. நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்ததால் வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் 50 கிலோ எடை பிரிவு பெண்களுக்கான ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் அமெரிக்க வீராங்கனைக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும். போட்டியின்றி அவர் தங்கப் பதக்கம் பெறுவார். வெள்ளிப் பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி முறைப்படி நடத்தப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் மல்யுத்த சங்கம் அறிவித்துள்ளது.