மறைந்த கொழும்பு ஹூனுப்பிட்டிய கங்காரம விகாரையின் பீடாதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி கல்பொட ஞாணிஸ்ஸர தேரரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன. இன்று மாலை 4.30க்கு விகாரை வளாகத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன.
கங்காராம விகாரையில் வைக்கப்பட்டுள்ள அவரின் பூதவுடலுக்கு பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சர்வ மதத்தலைவர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாரியார் மைத்ரி விக்கிரமசிங்க , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாப்ய ராஜபக்ஷ உள்ளிட்டோர் மறைந்த கல்பொட ஞாணிஸ்ஸர தேரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை தேரரின் இறுதிக்கிரியைகளை முன்னிட்டு இன்றைய தினம் விசேட வாகன போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென பொலிசார் அறிவித்துள்ளனர்.
பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையான காலப்பகுதில் வாகன நெரிசலை குறைப்பதற்காக விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படும். இதற்கமைய குறித்த காலப்பகுதியில் சில வீதிகளில் வாகன போக்குவரத்து மட்டப்படுத்தப்படும்.
கங்காரமை விகாரைக்கு வருகை தரும் அனைத்து வாகனங்களும் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, ஜினரத்ன மாவத்தை சந்தி ஊடாக செல்ல முடியுமென பொலிசார் அறிவித்துள்ளனர். டோசன் வீதியின் ஜினரத்ன மாவத்தைக்கு நுழையும் வீதி மூடப்பட்டிருக்கும். ஜினரத்ன மாவத்தையில் வாகன போக்குவரத்த ஒரு வழிப் பாதையாக மட்டுப்படுத்தப்படும்.
இறுதிக் கிரியைகளில் பங்கேற்க வருகை தருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு எல்டெயார் கட்டிடத்தின் பின்பக்க வளாகத்தை பயன்படுத்த முடியுமென பொலிசார் தெரிவித்துள்ளனர்.