கேரள வயநாடு மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாடு தீவிரமடைந்துள்ளது. முதல்வரின் நிவாரண நிதிக்கு பல முன்னணி பிரபலங்கள் நிதி வழங்கி வரும் நிலையில் மலையாள திரைப்பட உலகின் முன்னணி நடிகர் மோகன்லால் 3 கோடி இந்திய ரூபாவை (இலங்கை ரூபாவில் 10.71 கோடி ரூபா) நிவாரணமாக வழங்கியுள்ளார்.
கடந்த சில நாட்களாக நீடித்த பருவ மழையால் கேரளாவின் வயநாடு பகுதியில் பாரிய மண்சரிவு அனர்த்தம் ஏற்ப்பட்டுள்ளது. இதுவரை 350க்கும் அதிகமானோர் மண்சரிவினால் பலியாகியுள்ளனர்.
மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் விதமாக, கேரள முதல்வர் பினராயி விஜயனின் நிவாரண நிதிக்கு, வசதி படைத்தவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த நிதியை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சூர்யா 50 லட்சமும், நயன்தாரா 20 லட்சமும், நஸ்ரியா – பகத் பாஸில் 25 லட்சமும், விக்ரம் 20 லட்சமும், மம்முட்டி மற்றும் துல்கர் சல்மான் இருவரும் 35 லட்சமும் நிதி நிவாரணம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.