வெனிசுலா ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை சவாலுக்குட்படுத்தி அந்நாட்டு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் தலைநகர் கரகாசில் அமைதியின்மை ஏற்ப்பட்டுள்ளது. கடந்த 11 வருடங்களாக நாட்டின் ஜனாதிபதியாக இருந்த நிக்கலஸ் மடூரோ இம்முறை தேர்தலிலும் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டதையடுத்தே இந்த போராட்டம் ஆரம்பமானது.
மோசடியான முறையில் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். எதிர்க்கட்சியைச் சேர்ந்த எட்முன்தோ கொன்சால்வேஸ் தலைமையிலான கூட்டணி 70 வீதத்திற்கும் அதிக வாக்குகளை பெற்றுள்ளதை முழுமையான தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ள பின்புலத்தில் மடூரோ வெற்றிபெற்றுள்ளதாக அறிவித்துள்ளமையே மக்களின் இந்த போராட்டத்திற்கு காரணமாகும்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் கண்ணீப்புகைப் பிரயோகம் மற்றும் இறப்பர் குண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். தேர்தல் முடிவுகளை வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கமைய வெளியிடுமாறு ஐக்கிய நாடுகள் சபை உட்பட மேற்குலக நாடுகள் வெனிசுலா தேர்தல் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தன.
இதேவேளை நிக்கலஸ் மடூரோவை ஜனாதிபதியாக அங்கீகரிக்காத ஆர்ஜன்டினா, பெரு, சிலி உள்ளிட்ட 6 லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள தமது இராஜதந்திரிகளை மீள அமைப்பதற்கு வெனிசுலா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.