முஸ்லிம்களுக்கு தமது மதநம்பிக்கையின் பிரகாரம் நல்லடக்கம் செய்வதை உறுதி செய்வதற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் எந்தவொரு இனமாக அல்லது மதமாக இருந்தாலும் எந்த ஒரு நபரின் இறுதிச் சடங்கையும் அவரது இறுதி விருப்பத்திற்கு அமைய மேற்கொள்ள இடமளிப்பது தொடர்பிலும் குறித்த குழு ஆராயுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இவை தொடர்பான சட்டங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டி, கட்டுகெலே ஜும்மா பள்ளிவாசலில் நேற்று இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ரமழான் நோன்பைக் கூட சரியாக நோற்க முடியவில்லை.
கடந்த வருடம் முதல் பொருளாதாரம் மேம்பட்டு வருவதால், இன்று வழக்கம் போல் ரமழான் நோன்பு காலத்தை கழிக்கவும், ரமழான் நோன்பை நோற்கவும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
ரமழானின் போது முஸ்லிம் சமூகம் சிறப்பாக நோன்பை நோற்று நற்பண்புகளை வளர்த்துக் கொள்கிறது. ரமழான் பண்டிகையும் சிங்களப் புத்தாண்டும் ஒரே சமயத்தில் கொண்டாடப்பட இருக்கிறது.இன, மத பேதமின்றி செயற்படக்கூடிய கலாசாரம் வரலாற்றில் இருந்து இந்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.