நாட்டில் தற்போது நிலவி வரும் வெப்பமான காலநிலையானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களையும் ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் .
பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.
விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல் , கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல் , பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை செய்யலாம்.
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.
செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன, அதிக வெப்பநிலையால் மென்மையான தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம் என்றும் அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் .