பெரியநீலாவணை கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாசா நல்லடக்கம்
பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பாக்கியத்து சாலிஹாத் வீதியில் கொலை செய்யப்பட்டவர்களின் பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெற்றுள்ளன.
இதனையடுத்து அவர்களின் ஜனாசாக்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் மருதமுனை அக்பர் மையவாடியில் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன. ஜனாஸா நல்லடக்கத்தில் பெருந்தொகையான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
குறித்த இந்த சம்பவம் மருதமுனை பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முகம்மது கலீல் முஹம்மது றிகாஸ் (வயது 29), முகம்மது கலீல் பாத்திமா பஸ்மியா (வயது 18) ஆகிய விசேட தேவையுடைய்த இரு பிள்ளைகளும் நேற்று காலை கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்த பிள்ளைகளின் தாய் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மரணமாகியிருந்தார்.
இக்குடும்பத்தில் 03 ஆண் மக்களும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். இவர்களில் இரு சகோதரர்கள் வெளிநாட்டில் தொழில்புரிகின்றனர். குறித்த விசேட தேவையுடைய இரு பிள்ளைகளையும் அவர்களது தந்தை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையிலேயே இரு பிள்ளைகளையும் தந்தை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வருகின்றது.
பிள்ளைகளின் தந்தையான முஹம்மது மீர்ஷா முகம்மது கலீல் (வயது 63) என்பவரே இந்த கொலைகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பிள்ளைகளை கொலை செய்த தந்தை அதன் பின்னர் தானும் தற்கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார். எனினும் அயலவர்களினால் அவர் மீட்கப்பட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாயில் அனுமதிக்கப்பட்டார். பொலிசாரின் பாதுகாப்பில் அவர் தீவிர சிகிச்சைகளுக்கு உட்பட்டுள்ளார்.