காசா மக்களுக்கான உதவிகளை மீள வழங்க கெனடா தீர்மானித்துள்ளது. பலஸ்தின மக்களுக்கு நிவாரண உதவிகளை முன்னெடுக்கும் ஐக்கிய நாடுகளின் உதவி முகவரகத்திற்கு சர்வதேச நாடுகள் மேற்கொண்டு வந்த உதவிப் பணிகள் அண்மையில் நிறுத்தப்பட்டன. இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்களையடுத்து, ஐக்கிய நாடுகளின் உதவி முகவர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் சிலர் தாக்குதல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இதனையடுத்து மேற்குலக நாடுகள் காசா மக்களுக்கான உதவிகளை இடைநிறுத்தியது. இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் காசா மக்களுக்கான உதவிகளை மீண்டும் வழங்குவதற்கு கெனடா தீர்மானித்துள்ளது.
இதற்கமைய உதவிப்பொருட்களைக் கொண்ட கப்பல்கள் விரைவில் காசாவிற்கு செல்லுமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கெனடா உட்பட 16 நாடுகள் காசா மக்களுக்கென ஐக்கிய நாடுகளின் உதவி முகவரகத்திற்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றன. இதேவேளை கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி முதல் இடம்பெற்று வரும் இஸ்ரேல் -ஹமாஸ் மோதல்களினால் இதுவரை 30 ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்தினர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.