அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான குறைந்தபட்ச வேகம் உள்ளிட்ட புதிய விதிமுறைகளை அரசாங்கம் விரைவில் அறிமுகப்படுத்தும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் குணவர்தன, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்படும் என்றார்.
விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டு அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது.
நெடுஞ்சாலைகளில் ஏற்படும் வீதி விபத்துக்கள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் கீழ் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக தெரிவித்த அமைச்சர், இந்த கலந்துரையாடலில் பொலிஸார், வீதி பொறியியலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டதாக தெரிவித்தார்.
“கட்டுநாயக்க – கொழும்பு நெடுஞ்சாலையில் பதிவாகும் பல விபத்துக்கள் அதிக வேகத்தினால் ஏற்படுவதாக கலந்துரையாடலில் கண்டறியப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் குறைந்த வேகத்தில் செல்லும் வாகனங்களை முந்திச் செல்ல முற்படும் வாகனங்களாலேயே விபத்துக்கள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது,” என்றார் .
பயணிக்கும் போது சீட் பெல்ட் மற்றும் ஏனைய பாதுகாப்பு உபகரணங்களை அணியாமை, குடிபோதையில் வாகனம் செலுத்துதல் மற்றும் வீதி விதிகளை பின்பற்றத் தவறியமை ஆகியன இலங்கையில் நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதிவேக நெடுஞ்சாலையில் வெளிச்சம் குறைவாக இருப்பதாக கூறப்படுவதை மறுத்த அமைச்சர் குணவர்தன, சாரதியின் வசதிக்காக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பிரதிபலிப்பு விளக்குகளே நெடுஞ்சாலைகளில் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பல விபத்துக்கள் பதிவாகியுள்ள நிலையில், குறிப்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்த சம்பவத்தின் வெளிச்சத்தில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கெரவலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்துக்கு அதீத வேகத்தினால் ஏற்பட்ட விபத்து என கண்டறியப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சரின் விபத்துக்குப் பின்னர், அதே அதிவேக நெடுஞ்சாலையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் கொல்லப்பட்ட மற்றுமொரு விபத்தும் பதிவாகியுள்ளது.