தேவேந்திர முனை கடற்பகுதியில் 65 கிலோ கிராமிற்கு அதிக எடைக்கொண்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்துவிசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நேற்றைய தினம் கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் சந்தேக நபர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களிடம் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான அனுமதியை கோரினர். கைப்பற்றப்பட்ட 2 மீன்பிடி படகுகளை கடற்படையினரின் இறங்கு துறையில் தரித்து நிறுத்துமாறும், சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான அனுமதியையும் நீதவான் வழங்கியுள்ளார்.
படகில் காணப்பட்ட மீன்களை விற்பனை செய்து, குறித்த பணத்தை வழக்குக்காக செலவிடுவமாறு நீதவான் மீன்பிடி மற்றும் நீரியில் வள திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் சந்தேக நபர்களின் தொலைபேசி தரவுகளை பெற்றுக்கொள்ளுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தே நபர்களில் ஒருவர் இதய நோய் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரை ஆய்வுகளுக்கு உட்படுத்தி உரிய வைத்திய அறிக்கை சமர்பிக்க வேண்டுமெனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.