fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

13 ஆவது திருத்தத்தின் அதிகாரங்களை மாகாண அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக பயன்படுத்துங்கள்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 5, 2024 14:20

13 ஆவது திருத்தத்தின் அதிகாரங்களை மாகாண அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக பயன்படுத்துங்கள்

மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது. எனவே, அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதேபோல் அதிகாரப் பகிர்வு என்பது ஒரு அரசியல் எண்ணக்கருவாக மாத்திரம் அன்றி, பொருளாதார அடிப்படையிலும் யதார்த்தமாக அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதேபோல், மாகாண மட்டத்தில் சுயாதீன பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பிலான தெரிவை ஜப்பான், கொரியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறும், 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தங்களது மாகாணத்தின் அபிவிருத்திக்காக தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டுமென அனைத்து மாகாணங்களினதும் மக்கள் பிரதிநிதிகளிடத்தில் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

யாழ். மாவட்ட தொழில் வல்லுனர்களுடன் யாழ்ப்பாணத்தில் நேற்று (04) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சகல துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் வல்லுனர்கள் இதனில் கலந்துகொண்டிருந்ததோடு, நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர்கள் வழங்கிய யோசனைகள் மற்றும் அவர்களின் கேள்விகளுக்கும் ஜனாதிபதி சாதகமான பதில்களை வழங்கியதுடன, அவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

2024 -2025 இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வருடங்களாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அதற்காக கொள்கை ரீதியில் மேற்கொள்ளப்படவிருக்கும் மூலோபாய மாற்றங்கள் குறித்தும் அறிவுறுத்தினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

2019 உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து. 2020 ஆம் ஆண்டில் கொவிட் தொற்று காரணமாக மேலும் சரிவடைந்தது. அந்த நிலை 2022 இல் மேலும் மோசமாக மாறியிருந்ததோடு, 7% மறைப்பெறுமானத்தை விடவும் வீழ்ச்சியடைந்தது.

அந்த நெருக்கடியான காலத்தை கடந்து 2023 ஆம் ஆண்டில் ஓளரவு பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் இயலுமை எமக்கு கிட்டியது. 2023 ஆம் ஆண்டில் முதல் இரு காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி குறைவாக காணப்பட்ட போதிலும் அடுத்த இரு காலாண்டுகளில் வளர்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக நான்காம் காலாண்டியில் முன்னேற்றகரமான வளர்ச்சியை காண முடிந்தது.

அந்த அடிப்படையில் ,இவ்வருடத்தில் 3% பொருளாதார வளர்ச்சியை பெற்றுக்கொள்ள நாம் எதிர்பார்ப்பதோடு, 2025 ஆம் ஆண்டில் 5% ஆக பொருளாதார வளர்ச்சியை பலப்படுத்த எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு நாம் முன்னோக்கிச் செல்ல முடியும். இவ்விரு வருடங்களும் நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் வருடங்களாகும். இன்று நாம் நாட்டின் பொருளாதார முறைமையை மாற்றியுள்ளோம். இன்று நாம் பணம் அச்சிடுவதில்லை. அச்சிடும் பட்சத்தில் ரூபாயின் பெறுமதி குறைந்து பணவீக்கம் அதிகரிக்கும். அதேபோல் வங்கிகளிடத்திலிருந்து கடன் பெறுவதும் இல்லை. எமது அரச வங்கிக் கட்டமைப்புக்களும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளன.

அதனால் கடன் மற்றும் பணம் அச்சிடும் செயற்பாடுகளை விடுத்தே நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். அதனாலேயே கடன் வழங்குநர்களிடத்தில் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்நாட்டின் பொருளாதாரத்தை போதிய அளவு பலப்படுத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.

அதனால் நாம் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். நாம் இவ்வருடத்தில் 12% மொத்த தேசிய உற்பத்தியை பெற்றுக்கொள்ள வேண்டும். இறுதியில் 15% ஆக அதனை பலப்படுத்திக்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

அதனாலேயே இவ்வருடத்தில் வற் வரியை அதிகரிக்க நேரிட்டது. போதியளவு வருமானம் உள்ள பொருளாதாரம் ஒன்று எமக்கு அவசியம். அதேபோல் நாம் வரவு செலவு திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். எமது தேவைகளுக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

எமது வருமானத்தில் அதிக தொகையை கடன் வட்டியாக செலுத்த நேர்ந்துள்ளமையே பெரும் பிரச்சினையாகும். அந்த பிழையை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் அரசாங்கம் தங்களது இயலுமைக்கு மிஞ்சிய செலவுகளை செய்துள்ளது. இவ்வாறான தவறுகளை சரிசெய்து நாம் முன்னேற வேண்டும். எனவே எமக்கு புதிய பொருளாதாரம் தேவை. நாம் திட்டமிட்ட அடிப்படையில் நாட்டில் அந்தப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி வருகின்றோம்.

இது ஒரு தொழில் வாய்ப்பை உருவாக்கும் பொருளாதாரம். மேலும் அது நமக்கு அந்நியச் செலாவணியை மேலதிகமாகக் கொடுக்கும், அதிக வருமானத்தைத் தரும் பொருளாதாரமாக இருக்க வேண்டும். அதன்போது ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட விவசாயப் பொருளாதாரம் தொர்பில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

வடக்கு மாகாணத்தை தனித்துவமான பொருளாதார மையமாக கட்டியெழுப்ப முடியும். மேலும், வடக்கை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக உருவாக்க முடியும். வட. மாகாணத்தின் அபிவிருத்திக்குத் தேவையான அனைத்து வளங்களும் இங்கு உள்ளன. வடக்கின் அபிவிருத்திக்கு மட்டுமன்றி முழு நாட்டின் அபிவிருத்திக்கும் பங்களிக்க முடியும்.

அதற்கு போதுமான அதிகாரப்பகிர்வு ஏற்கனவே இடம்பெற்றுள்ளது. அந்த செயற்பாடுகளுக்கு 13 ஆவது திருத்தத்தின் மூலம் கிடைத்துள்ள அதிகாரங்களே போதுமானது என நினைக்கின்றோம். கொழும்பில் இருந்து பணம் வரும் வரை காத்திருக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நாம் ஜப்பான் தொடர்பில் கவனம் செலுத்தினால், ஜப்பான் சமஷ்டி ஆட்சியுள்ள ஒரு நாடு அல்ல. ஆனால் அதன் அனைத்து மாகாணங்களும் அபிவிருத்தி அடைந்துள்ளன. அதேபோன்று, கொரியா, ஐக்கிய இராச்சியம், ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகள் அந்த வளர்ச்சியை எட்டியுள்ளன. அப்படியானால் ஏன் ஒரு நாடாக எமக்குரிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது?

அதிகாரப் பகிர்வு பற்றி கதைப்பதுபோன்று, அந்த அதிகாரங்களை தமது மாகாணங்களின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும். நாம் அரசியல் ரீதியாக அதிகாரப்பகிர்வு பற்றி பேசுகிறோம். சட்டத்தால் இந்த அதிகாரங்கள் அனைத்தையும் வழங்கலாம். ஆனால் உங்களின் மாகாணத்தை அபிவிருத்தி செய்ய போதிய பணம் இல்லை என்றால் அதன் பெறுமதி என்ன என்று நாம் கண்டறிய வேண்டும்.

அதிகாரப் பகிர்வு குறித்து நாம் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தலாம். ஆனால் இன்றைய நிலவரப்படி மேல் மாகாணத்தால் மாத்திரமே தனது சொந்த செலவை செய்ய முடிகிறது. அதன்படி, எனைய அனைத்து மாகாணங்களும் மேல் மாகாணத்துடன் இணைகின்றன. எனவே, தமது மாகாணத்தை அபிவிருத்தி செய்ய, தங்கள் சொந்த மாகாணங்களுக்குள் வலுவாக இருக்க வேண்டும்.

உங்கள் மாகாணத்தில் ஒரு வெளிநாட்டு மொழிப் பாடசாலையை நிறுவ விரும்பினால், அதற்கு அரசாங்கம் ஏன் பணம் வழங்க வேண்டும்? அதற்கான கேள்வி மற்றும் தேவை இருந்தால், நீங்கள் அதை எளிதாக ஆரம்பிக்க முடியும். மாணவர்கள் கல்வியைத் தொடர தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்குகிறது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் கல்வி இப்படித்தான் செயல்படுகிறது. இந்த நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை சீர் செய்யத்தான் என்னால் முடியும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட பலர் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 5, 2024 14:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க