உடப்புவ புனவிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (25) அதிகாலை பிரதேசவாசிகள் இல்லாத வேளையில் சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக உடப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
கோடீஸ்வரரான தேங்காய் மற்றும் இறால் பண்ணை வியாபாரி ஒருவரின் வீட்டில் திருடர்கள் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புனவிட்டிய தேவாலயத்தில் நேற்று (24) இரவு இடம்பெற்ற கிறிஸ்மஸ் ஆராதனைக்கு சென்றுவிட்டு இன்று அதிகாலை வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த தங்கமும் பணமும் திருடப்பட்டமை உறுதி செய்யப்பட்டதையடுத்து குறித்த கோடீஸ்வர வர்த்தகர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த வர்த்தகரின் வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உடப்புவ பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பரிசோதகர் தம்மிக்க குலதுங்க உள்ளிட்ட அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருட்டுச் சம்பவம் தொடர்பில், பொலிஸ் மோப்ப நாய்ப் பிரிவு மற்றும் பொலிஸ் களப் புலனாய்வுப் பிரிவினர் நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.