பௌத்த மதம் உள்ளிட்ட பிற மதங்களை அவமதித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனுவில் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக அவரது சட்டத்தரணி இன்று (12) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன, ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின் கீழ் தனது கட்சிக்காரரை கைது செய்தமை சட்டத்திற்கு முரணானது என தெரிவித்தார்.
இதன்படி, தற்போதுள்ள மனுவில் திருத்தம் மேற்கொள்ள அல்லது இந்த விடயம் தொடர்பான புதிய மனுவொன்றை சமர்ப்பிக்க எதிர்ப்பார்ப்பதாகவும், அதற்கான திகதியை வழங்குமாறும் ஜனாதிபதியின் சட்டத்தரணி கோரினார்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீர்ஸ், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் மேலதிக ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்பிறகு, மனுவை பரிசீலிக்க அடுத்த ஆண்டு மார்ச் 14 ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
காமினி அமரசேகர, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.