இலங்கை மத்திய வங்கியில் பாதுகாப்புப் பெட்டியிலிருந்து 5 மில்லியன் ரூபா காணாமல் போனமை தொடர்பில் இரண்டு விசாரணைகள் நடத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேராவுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் மத்திய வங்கியின் உள்ளக விசாரணைப் பிரிவினால் இந்த விசாரணைகள் நடத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், பெட்டகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நாம் அறிக்கையொன்றை வெளியிட்டோம். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக மத்திய வங்கி உள்ளக விசாரணையை நடத்தி வருகிறது. பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகள் முடிவடைந்த பின்னரே இது தொடர்பில் தெளிவான அறிக்கையை வழங்க முடியும். விசாரணைகளை விரைவாக முடிக்குமாறும் மத்திய வங்கி ஆளுநர் பொலிஸ் மா கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்காலத்தில் இது குறித்து இந்த சபைக்கு தெரிவிக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.