மூளைச்சாவு அடைந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க மாணவனின் பெற்றோர் தீர்மானித்துள்ளனர்.
வெயங்கொடை மாலிகதென்ன பகுதியில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பதிவாகியுள்ளது.
23 வயதான இசங்க ரணசிங்க ரயிலில் பயணித்த போது தெமட்டகொட மற்றும் களனி நிலையங்களுக்கு இடையில் ரயிலில் இருந்து தவறி விழுந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது, மாணவன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக வைத்தியர்கள் மாணவரின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
வைத்தியர்களின் அறிவித்தலையடுத்து, இசங்க ஏற்கனவே தெரிவித்திருந்த படி, அவரது அனைத்து உறுப்புக்களையும் தானமாக வழங்குவதற்கு இசங்கவின் பெற்றோர்கள் வைத்தியர்களிடம் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இசங்கவின் இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கணையம் மற்றும் கல்லீரல் ஆகிய உடல் உறுப்புக்கள் ஐந்து நோயாளர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, இலங்கை கண் மருத்துவச் சங்கம் இசங்கவின் கண்களைப் பெற்றுள்ள நிலையில், அவரது தோல் இரத்த நாளங்கள், முழங்கால் எலும்புகள் உள்ளிட்ட பல உடல் உறுப்புகளை நோயாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.