இறக்குமதி வரி அதிகரிப்பதற்கு முன்னர் 25 சதத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனி தொகையினை இன்று முதல் அரசாங்கம் பொறுப்பேற்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுடன், குறித்த சீனி தொகையை, சதொச விற்பனையகங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பல்பொருள் அங்காடிகள் ஊடாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஒரு கிலோகிராம் சீனி 275 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. சீனிக்கான இறக்குமதி வரியானது 25 சதமாக காணப்பட்ட நிலையில், அதனை 50 ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது.
எனினும், சில நிறுவனங்கள் வரியை அதிகரிக்கும் தீர்மானத்தை முன்கூட்டியே அறிந்து பெருமளவில் சீனியை இறக்குமதி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதேநேரம், சந்தையில் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக, கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒரு இலட்சம் மெற்றிக் டன் கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.