சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் காரணமாக மக்கள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்குகின்ற போதிலும், மாற்று வழிகள் எவையும் இல்லை என விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்றைய அமர்வில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்காமல் இருந்திருந்தால் எமக்கு இன்று பாராளுமன்றம் ஒன்று இருந்திருக்காது. அவர் முன்னதாக சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோருமாறு வலியுறுத்தினார். இருப்பினும் நாம் அதற்கு செவிசாய்க்கவில்லை. அதனை நாம் ஏற்று கொள்கின்றோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கப் பெற்றதாலேயே நாடு மீட்சி பெற்று வருகின்றது. இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் கடினமாக உள்ளது. இதன்காரணமாகவே, மின் கட்டணம், நீர் கட்டணம் உள்ளிட்ட பல கட்டணங்களில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
எதிர்கட்சியும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. எவ்வாறிருப்பினும், எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், தற்போது உள்ள வேலைத்திட்டத்தையே முன் கொண்டு செல்ல வேண்டும். ஆகையால் மக்களை குழப்பும் வகையில் கருத்துக்களை வெளியிட வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.