ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிலும் ஏனைய சர்வதேச மன்றங்களிலும் இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவிற்காக வெனிசுலாவிற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார்.
வெனிசுலா தூதுவர் கபயா ரொட்ரிக்ஸ் கொன்சாலஷை அலரிமாளிகையில் சந்தித்த போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் வெனிசுலா போன்ற வளரும் நாடுகளுடன் கையாள்வதில் சில வசதி படைத்த நாடுகள் இரட்டைத் தரத்தை கடைப்பிடிப்பதாக தூதுவர் கோன்சலஸ் குறிப்பிட்டார் என்றும் இறையாண்மை உள்ள நாடுகளில் இத்தகைய தலையீடுகளை கூட்டாக எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கை இளைஞர்கள் வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்வதில் தற்போது அதிக ஆர்வம் கொண்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், இலங்கைப் பல்கலைக்கழகங்கள் ஸ்பானிய மொழி ஆசிரியர்களை குறுகிய காலத்திற்கு பரிமாற்ற அறிஞர்களாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் கல்விப் பரிமாற்றத் திட்டத்தை அறிமுகப்படுத்துமாறு வெனிசுலாவிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.