fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மோசடியில் ஈடுபட்டுள்ளவர்களை காப்பாற்றுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் – விளையாட்டுத்துறை அமைச்சர்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2023 15:30

மோசடியில் ஈடுபட்டுள்ளவர்களை காப்பாற்றுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் – விளையாட்டுத்துறை அமைச்சர்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை கலைத்து இடைக்கால நிர்வாகக்குழுவை நியமித்தமை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றில் இன்று விசேட உரை நிகழ்த்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான கணக்காய்வு அறிக்கை பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் சார்பில் நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள், குறித்த கணக்காய்வு அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறும் நிதி மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி, நீதியமைச்சு, சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட தரப்பினருக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வு அறிக்கையின் அடிப்படையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கணக்காய்வாளர் நாயகமும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டது. எனினும், அந்த குழுவுக்கு இடைக்கால தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவு தொடர்பான தகவல்கள் நேற்று முற்பகல் 11.10 அளவில் தமக்கு கிடைக்கப்பெற்றதாக அமைச்சர் தெரிவித்தார்

எனினும் இது தொடர்பில், சட்டமா அதிபரை தொடர்பு கொண்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தாம் கோரிக்கை விடுத்ததாகவும், எனினும் அதற்கு உரிய பதிலளிக்கப்படவில்லை எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், மோசடியில் ஈடுபட்டுள்ளவர்களை காப்பாற்றுவதற்கு சிலர் முயற்சிப்பதாகவும் அமைச்சர் குற்றஞ் சாட்டியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2023 15:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க