தெதுரு ஓயாவின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்கள் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக, தெதுரு ஓயாவின் 4 வான் கதவுகள் தலா 4 அடி உயரத்தில் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் குறித்த நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 11,200 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக தெதுரு ஓயா நீர்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
எனவே, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, புத்தளத்தில் உள்ள தப்போவ, இங்கினிமிட்டிய மற்றும் ராஜாங்கன ஆகிய நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் உயர்வடைந்து காணப்படுகின்ற போதிலும், வான் கதவுகள் எதுவும் திறக்கப்படவில்லை என புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனினும் தொடர்ந்தும் மழை பெய்தால் குறித்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்க நேரிடும் எனவும் அவர் மேலும் கூறினார்.