இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சட்டமூலத்திற்கு எதிராகவும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் நாளைய தினம் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த 4 வருடங்களுக்கும் அதிக காலம் மின்சார சபை ஊழியர்களுக்கு வேதனம் அதிகரிக்கப்படவில்லை என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையானது இலாபம் ஈட்டும் ஒரு நிறுவனமாகும். எனினும் நட்டத்தில் இயங்குவதாக அரசாங்கம் கூறி, பல வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு இலங்கை மின்சார சபையை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது. அத்துடன், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மக்களை அசௌகரியப்படுத்தும் வகையில், மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றது.
எனவே, இந்த விடயங்களுக்கு தமது சங்கம் எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.