ஆந்திராவில் நேற்று இரவு ஒரே தண்டவாளத்தில் சென்ற விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் மற்றும் பாலசா எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதிக்கொண்டன. இதில் மொத்தம் 9 பேர் பலியாகி உள்ள நிலையில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தான் ஒரே தண்டவாளத்தில் எப்படி 2 ரயில்கள் வந்தன. விபத்து நிகழ்ந்தது எப்படி? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசாவில் உள்ள ராயகடாவுக்கு பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசா நோக்கி சென்ற ரயிலும் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் விபத்தில் சிக்கின. இதில் ரயில்களின் பெட்டிகள் தடம் புரண்டன. மொத்தம் 3 பெட்டிகள் தடம் புரண்டுள்ள நிலையில் அதில் இருந்த பயணிகள் அலறி துடித்தனர்.
இதையடுத்து அங்கிருந்த பயணிகள் மற்றும் ரயில்வே பொலிஸார் உடனடியாக மீட்பு பணியை தொடங்கினர்.
விபத்து எப்படி நடந்தது?
ஒரே நேரத்தில் 2 ரயில்கள் எப்படி தண்டவாளத்தில் வந்தன? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி புறப்பட்டு சென்ற ரயில் கந்தகப்பள்ளி கிராமத்தின் அருகே சென்றபோது திடீரென்று பிரேக்கில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த ரயில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த வேளையிலேயே அந்த தண்டவாளத்தில் வந்த பாலசா எக்ஸ்பிரஸ் அங்கு நின்ற விசாகப்பட்டினம்-ராயகடா ரயிலின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியுள்ளது.