9 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
Related Articles
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 3 ஆயிரத்து 672 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 946 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
கடும் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, மண்மேடு சரிவு மற்றும் பலத்த காற்று என்பவற்றினால் இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை மற்றும் கம்பஹா ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகளில் 217 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 37 குடும்பங்களைச் சேர்ந்த 147 பேர் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, களுகங்கை, கிங்கங்கை, நில்வலா கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவை சுற்றியுள்ள தாழ்நில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாயம் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் நாகலகம் வீதி பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கொலன்னாவ பிரதேசத்தில் சில இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அந்த பகுதியிலுள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர் களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், ஹொரணை மத்துகம பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதேவேளை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.