இந்தியா உட்பட பல நாடுகளில் பதிவாகியுள்ள ‘நிபா’ வைரஸைக் கண்டறியும் சிறப்புப் பரிசோதனைக் கருவிகளை கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த வைரஸ் தொடர்பில் நாட்டு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எந்தவொரு இடர் நிலைமையையும் எதிர்கொள்ளும் வகையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையுடன் நிபா வைரஸைக் கண்டறிவதற்குத் தேவையான விசேட பரிசோதனைக் கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் அவை இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த வைரஸ் தொடர்பிலான விசேட வைத்தியர் ஜானகி அபேநாயக்க இந்த வைரஸ் தொடர்பில் தெரிவிக்கையில், நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உலகளாவிய ரீதியில் குறிப்பிட்ட சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் தயாரிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
தற்போதைய விஞ்ஞான தரவுகளின்படி இந்த நோய் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவக்கூடியது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் இலங்கையர்கள் நன்கு அறிவுடனும் கவனத்துடனும் இருப்பது மிகவும் அவசியமானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட நபரின் உடல் திரவங்கள் மற்றும் சிறுநீர் மூலம் நிபா பரவுகிறது, மேலும் இந்த நோய் பெரும்பாலும் நோயாளியுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு பரவுகிறது.
பிற வைரஸ் காய்ச்சலைப் போலவே நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி, அசதி, இருமல், குமட்டல்/வாந்தி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படலாம். மூளை, சிறுமூளை, நரம்பு மண்டலப் பாதிப்புகளால் அயர்ச்சி ஏற்படும். நிலை தடுமாறும். மனதில் குழப்பம் நிலவும். சிலருக்கு வலிப்பும் ஏற்படலாம். பார்வைக் கோளாறும் ஏற்படலாம். இறுதியில், மயக்க நிலையை அடைந்து மரணம் ஏற்படும். இந்தத் துயர நிலை, நரம்பு பாதிப்பு ஏற்பட்ட ஓரிரு நாள்களிலேயே சம்பவித்துவிடும் என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், நிபா வைரஸ் பரவுவது மிகவும் மெதுவாக இருப்பதால், நாடுகளுக்கு இடையில் பரவும் அபாயம் இல்லை என தொற்றுநோயியல் துறையின் தலைவர் டாக்டர் சமித்த கினிகே மேலும் தெரிவித்துள்ளார்.