எதிர்வரும் 2024ஆம் ஆண்டு மின்சார சபை ஊழியர்களுக்கு பயன்படுத்தப்படாத விடுமுறைக்கான போனஸ் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்பட மாட்டாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
மின்சார சபையின் 35 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கடந்த வியாழன் (14ஆம் திகதி) கூடிய போதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் அமைச்சருக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மின்சார சபையிடம் பணம் இல்லாததால் போனஸ் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
மின்சார சபையில் பணப் பற்றாக்குறை ஏற்படுவதற்கு காரணம் ஊழியர்களின் தவறு அல்ல, சம்பந்தப்பட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் நடவடிக்கைகளே காரணம் என தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறுகின்றனர். இங்கு மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தை எதிர்வரும் 24ஆம் திகதி அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.