புதிய ஊழல் தடுப்புச் சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) முதல் அமுலுக்கு வரும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேவையான வர்த்தமானி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக நீதி அமைச்சர் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்திற்கு இணங்க. புதிய ஊழல் தடுப்பு சட்ட விதிமுறைகளின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் புதிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக பொருத்தமான நபர்களை ஏற்பாடு செய்து நியமிக்குமாறு சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
புதிய ஊழல் தடுப்புச் சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வந்தவுடன், அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்துடன் இலஞ்ச ஆணைக்குழுவிற்கு புதிய ஆணையாளர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகத்தை ஜனாதிபதி நியமிப்பார் என நீதி அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
அவர்களின் ஆட்சேர்ப்புக்கான அளவுகோல் அரசியலமைப்பு சபையால் தயாரிக்கப்படும் என்றார்.
தற்போதுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் ஏதேனும் பிழையான தீர்மானங்கள் வழங்கப்பட்டிருந்தாலோ அல்லது வாபஸ் பெறப்பட்டாலோ விசாரணை செய்வதற்கு புதிய இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 29 வருடங்களாக செயற்பட்ட போதிலும் இலஞ்சம் மற்றும் ஊழலும் நாட்டில் மறைந்துவிடவில்லை எனவும், எனவே அரசாங்கம் புதிய தடைச் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது நடைமுறையில் உள்ள இலஞ்ச ஒழிப்பு சட்டம் பொதுத்துறை மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும், புதிய விதிமுறைகள் தனியார் துறையின் ஊழல்களை விசாரிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும் என அவர் குறிப்பிட்டார்.