2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக செனல் 4 வெளியிட்ட காணொளியில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் புதிய விசாரணைகளை மேற்கொள்ளும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அமைச்சர் நாணயக்கார, நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, இதற்காக விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க முன்மொழியப்பட்டதாக தெரிவித்தார்.
கோரிக்கைகளை விசாரிப்பதற்காக சர்வதேச உதவிகளைப் பெறுவது குறித்தும் அரசாங்கம் கலந்துரையாடியதாகவும், தேவைப்பட்டால் அரசாங்கம் அதனைச் செய்யும் என்றும் அமைச்சர் நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது என அமைச்சர் உறுதியளித்தார்.
ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் நடைபெறும் வேளையில் செனல் 4 போன்ற செய்தித் தளங்கள் காணொளிகளை வெளியிடுவது வழமையான நடைமுறையாகும் என அவர் தனது தனிப்பட்ட கருத்தை தெரிவித்தார்.
எவ்வாறாயினும், காணொளியில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிச்சயமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தாம் கருதுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
செனல் 4 இன் கூற்றுக்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.