தலங்கம துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடையவர் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற நிலையில் கைது
Related Articles
அண்மையில் தலங்கமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 44 வயதுடைய நபரொருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை ( 25) மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். கடன் கொடுப்பவரான பாதிக்கப்பட்ட நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் பிரதேசத்தை விட்டு வெளியேறிய இருவரில், 23 வயதுடைய ஒருவர் சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நுகேகொட பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்குகிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த நபருக்கு எதிராக பயணத்தடையைப் பெறவும் நிலைமையை சிங்கப்பூர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
குறித்த நபர் சிங்கப்பூர் விமானத்தில் ஏறிய போதிலும், அவர் சிங்கப்பூரில் தரையிறங்கியவுடன் கைது செய்யப்பட்டதுடன் சிங்கப்பூர் அதிகாரிகளால் உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
அதுருகிரிய பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞன், நேற்று (31) கட்டுநாயக்க விமான நிலையத்தில் திரும்பியவுடன் இலங்கை சட்ட அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
“அதுருகிரியே லடியா” என்ற பெயரில் செயற்படும் கிரிமினல் கும்பல் ஒருவரின் உத்தரவின் பேரில் குறித்த இளைஞன் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்க பொலிஸார் உத்தேசித்துள்ளனர்.