கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
களனி ஆற்றின் நீர் மட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அம்பத்தளை பிரதேசத்தில் மணல் மேடு அமைக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் அஜித் பெரேரா குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த நாட்களில், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் குடிநீர் சம்பந்தமான சிக்கல் நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைப் பற்றிப் பேசினால், அவற்றிற்குப் போதுமான தண்ணீரைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டாலும் , அதனை தீர்ப்பதற்காக களனி கங்கை ஊடாக அம்பத்தளை பிரதேசத்தில் மணல் மேடு அமைக்கப்பட்டுள்ளது.
நாம் எதிர்நோக்கும் இரண்டு பிரதான பிரச்சினைகளான ஆற்றின் நீர் மட்டம் குறைதல் மற்றும் குடிநீரில் உப்பு நீர் கலந்திருப்பது. அந்த சிக்கலை தீர்ப்பதற்காகவே மணல் மேடு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளுக்கு தொடர்ந்து நீர் விநியோகிக்கப்படும்
இருப்பினும், தற்போதைய வெப்பமான வானிலையால் நுகர்வோர் அதிக அளவு தண்ணீரை பயன்படுத்துவதால், எதிர்காலத்தில் சில சிக்கல் நிலைமைகள் தோன்றலாம். எனவே, எங்களால் வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு நுகர்வோரிடம் கேட்டுக்கொள்கிறோம்.
நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்காக முடிந்தவரை நதி மாசுபாட்டைக் குறைப்பதற்கு உதவுங்கள்.” என்றார்.