கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சில சத்திரசிகிச்சை அறைகள், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகள், சத்திரசிகிச்சை பிரிவுகள் உட்பட பல பிரிவுகளுக்கு துண்டிக்கப்பட மின்சாரம் தற்போது மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குமார விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (14) மின்வெட்டு காரணமாக A,B,D ஆகிய சத்திரசிகிச்சை பிரிவுகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சில சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டதுடன் சில சத்திரசிகிச்சைகள் மின் ஒளிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், குடிநீர் விநியோகம் மற்றும் தொலைபேசி அமைப்புகளும் முடக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் நாம் மேலும் வினவிய போது, நிலத்தடி மின்சார கேபிள் பழுதடைந்தமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் மின்சார சபை ஊழியர்கள் வந்து சீர் செய்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குமார விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
இதேவேளை, ஹப்புத்தளை பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறை மற்றும் தாதியர் விடுதி என்பன மிகவும் சிதிலமடைந்துள்ளமையினால் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் தாம் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.