இணையதளத்தில் 2006-ல் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்ட பிரபலமான சமூகவலைதளம் டுவிட்டர். டுவிட்டரில் பயனர்கள் தங்களை இணைத்து கொண்டு தங்களுக்குள் தகவல்களை, எழுத்து, புகைப்படம், ஒலி மற்றும் வீடியோ வடிவில் பரிமாறி கொள்ளலாம்.
இதற்கு உலகெங்கும் பல நாட்டு அதிபர்கள் உட்பட பல கோடிக்கணக்கான பயனர்கள் உள்ளனர். கடந்த 2022 அக்டோபரில், உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார்.
அதன் வருவாயை அதிகரிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக டுவிட்டர் எனும் பெயரை எக்ஸ் என மாற்றினார். இதனை விளம்பரபடுத்தும் விதமாக பிரகாசமாக ஒளிரும் வகையில் மிகப்பெரிய “X” லோகோ, சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள அந்நிறுவன தலைமையக கட்டித்தின் மேல் நிறுவப்பட்டது.
ஆனால் இதை நிறுவ முறையாக அனுமதி பெறப்படவில்லை என நகர நிர்வாகம் இந்நிறுவனத்திற்கு அறிக்கை அனுப்பியது. மேலும், அந்த கட்டிடத்தின் அருகில் வசிப்பவர்களில் பலர் அதன் அதிக ஒளியால் கண்கூசுதல் உட்பட பல தொந்தரவுகள் இருப்பதாக புகாரளித்தனர்.
மேலும் அதில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், மேல் தளத்தில் அது சரியாக நிலைநிறுத்தவில்லை என்றும் எந்நேரமும் அது கீழே விழும் ஆபத்து இருப்பதாகவும் அவர்கள் புகாரளித்தனர்.
இதுகுறித்த பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரிமாறி கொள்ளப்பட்டது. இதுகுறித்து சான் பிரான்ஸிஸ்கோவின் கட்டிட தர பரிசோதனை மற்றும் நகர திட்டமிடலுக்கான நிர்வாகத்திற்கு சுமார் 24 புகார்கள் வந்தது.
இந்நிலையில் இப்பிரச்சனை பெரிதாவதற்குள் எக்ஸ் நிறுவன அதிகாரிகள் லோகோவை மேல்தளத்திலிருந்து தாங்களாகவே அப்புறப்படுத்தி விட்டனர்.